ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம்
🌺 திருவாலீசுவரர் கோயில், இன்றைய திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருவாலீஸ்வரம், என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் இறைவன் வாலீசுவரர், இறைவி சௌந்தர்யநாயகி ஆவார்.
🌺 இக்கோயிலில் சோழர், சோழ பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரை முள்ளிநாட்டு "ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம்" எனக் குறிப்பிடுகின்றது. பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் மன்னார்கோயில் ஆகிய இம்மூன்று ஊர்களும் ஒரே பகுதியாக ராஜராஜச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியுள்ளது. முதலாம் ராஜராஜனின் காலத்திலும் அவருக்கு பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது.
🌺 இக்கோயிலின் சிற்பங்கள் சோழர் கலைப்பாணியை கொண்டு இருந்தாலும், இக்கோயில் கட்டிட அமைப்பு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் சோழர்களால் இவ்வூர் கைப்பற்றப்பட்ட போது விமானத்தில் உள்ள சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம்.
🌺 இக்கோயிலானது கருவறை, அர்த்தமண்டபம், மஹா மண்டபம் என்று அமைந்து இருதளமும் கொண்டு திராவிட சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதிஷ்டானத்தில் உள்ள வ்யாள வரி, பிரஸ்தரத்தில் உள்ள வ்யாள வரி, வலபியில் உள்ள பூத வரி ஆகியவை மிக நேர்த்தியாக எழிலார்ந்த வகையில் பாண்டியர் கால கலை அம்சத்துத்தடன் அமைக்கப்பட்டுள்ளது.
🌺 எளிமையான பாத பந்த அதிஷ்டானத்தில், பித்தியில் வேதிகையும் கொண்டு, கர்ணப்பத்தி, சாலை ஆகியவை பத்ர மாக அமைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட தெய்வங்கள் ஏதும்மில்லை. பிரஸ்திரத்தில் உள்ள கபோதத்தில் கொடிபாளைய, மைய கருக்கு வேலையும், நாசிகளில் பூ வேலைப்பாடும் அழகாக உள்ளது. கர்ணகூடு, பஞ்சரம், சாலை ஆகியவற்றில் சிவனின் பல்வேறு வடிவங்கள் சோழர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நாற்புறமும் ரிஷபமும், கிரிவ கோஷ்டங்களில் இறை உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளது.கோயிலை சுற்றி திருச்சுற்றும் உள்ளது.
🌺 விமானத்தில் அழகிய கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர் ,ஆடல்வல்லான்,கங்காளர், பார்வதி ஹிமவான் சிவன், ரிஷபாந்தகர், கஜசம்ஹாரமூர்த்தி, உமையொருபாகர், காம தகன மூர்த்தி, தாட்சாயிணி, ஆட்டுத்தலையுடன் இருக்கும் தட்சன், காலஸம்ஹர மூர்த்தி, பிரம்மா விஷ்ணுவுடன் லிங்கோத்பவர், திரிபுராந்தகர், சண்டேச அனுக்கிரக மூர்த்தி, கண்ணப்பர், தக்க்ஷீணா மூர்த்தி, யோக நரசிம்மர், பிரம்மா போன்ற பல்வேறு சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🌺 ராஜராஜன் காலத்தில் நாகர்கோவிலில் கோட்டாற்றுக்கு அருகில் நிறுத்தியதைப் போன்று பெரும் படையொன்று இப்பகுதியிலும் நிறுத்தப்பட்டு, இதற்கு மூன்று கை மகாசேனை என்றும் அழைக்கப்பட்டுள்ளது . சடாவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் கல்வெட்டு இக்கோயில் இறைவனைத் திருவாலீஸ்வரம் உடைய மகாதேவர் எனக் குறிப்பிடுகின்றது. ஊரினை முள்ளி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு ராஜராஜப் பாண்டி நாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் குலசேகர பாண்டியன் (பூவின்கிழத்தி) சீவல்லபன் ஆகியோரின் கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டியர்களின் கல்வெட்டுகள் இவ்வூரை திருவாலீஸ்வரம்ம் என்றும் ராஜ ராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.
🌺 சில கோயில்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றில் உள்ள சிற்பங்கள் கொள்ளை அழகுனுடன் இருக்கும் அவ்வகையில் சோழர்களின் கலையை ரசிப்பதாக இருந்தால், இனி திருநெல்வேலிக்கு சென்றால் அல்வாவுடன் சேர்த்து இக்கோயிலின் அழகையும் ருசித்து வாருங்கள்.
Comments
Post a Comment