கொற்றவை என்னும் கலைப்பாகி

தமிழர் பண்பாட்டின் தாய் தெய்வ மரபில் ஆதியும் அந்தமுமாக நிற்பவள் கொற்றவை. அவ்வை எனுஞ்சொல் மூத்தவள் எனும் பொருள் தரும். அதனை ஒட்டியே இவள் பழையோள் என்று விளிக்கப் பெறுகிறாள்.

வேட்டை சமூகமாக இருந்தப்போது அவர்களின் வேட்டை தெய்வமாக கொற்றவை இருந்திருக்கிறாள்.

தமிழரின் பாலை நிலத்து தெய்வமும் போர் மற்றும் போர்க்குடிகளின் தெய்வம் கொற்றவையே. கொற்றவையைப் பற்றி விரிவாக எடுத்து இயம்பும் நூல் சிலப்பதிகாரமே ஆகும்.

சிலம்பின் வேட்டுவ வரியில் கொற்றவை வருணனை பேசப்படுகிறது, கலைமான் மீதும் எருமைத்தலை மீதும் நிற்கும் கொற்றவை என்றும், வீரர்கள் தலைகளை அறிந்து வைக்கும் பலி பற்றியும், கொற்றவை கோயிலில் நடக்கும் மரக்கால் கூத்தைப்பற்றியும் விரிவாய் வருகிறது இந்தப்பகுதியில். 

#1 மனிதர்மேல் ஆவேசிக்கும் தெய்வம்!

தமிழ் நிலப்பரப்பின் ஒரு சிறப்பு இங்கு தெய்வங்கள் மனிதர் உள்ளே புகுந்து பேசும் எனும் நம்பிக்கை, வெறியாடும் வேலன் முதல் பின்னாளில் வைணவ நூல்கள் கூறும் பெருமாள் அர்ச்சகமுகமாக ஆவேசித்து பேசுதல் வரை இன்றைக்கும் பல தெய்வங்கள் மனிதருள் புகுந்து பேசும் வழக்கம் உண்டு.

கொற்றவை அந்த வகையில் சாலினி எனும் பெண்மேல் ஆவேசிக்கும் காட்சியை சிலம்பு அப்படியே காட்டுகிறது.

கோவலனும் கண்ணகியும் புகார் நகரம் விட்டு மதுரைக்கு செல்லுங்காலத்து வழியில் பாலை நிலத்தில் ஒரு மறவர் குடியில் ஐயை கோட்டத்தில் இளைப்பாறுகின்றனர்.

அங்கு மறவர்கள் இடையே #சாலினி எனும் பெண் மீது கொற்றவை ஏறி பேசும் பகுதியை அழகாக இளங்கோவடிகள் நமக்கு படம் பிடித்து காட்டுகிறார்.

"வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்,
பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி
தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,
கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப..."

வில்லையேந்திய மறவர்குடியின் சாலினி கொக்கரிக்கும் சத்தத்துடன் தன் மீது தெய்வம் ஏறி ஆடுகிறாள், மறவர்கள் உடல் சிலிர்க்க கைகளை தங்கள் தலைமேல் ஏற்றி ஆவேசத்துடன் ஆடி அவர்கள் செய்யத்தவறிய நேர்த்திக்கடனை செய்யுமாறு கூறுகிறாள். 

ஊரார் நடுவே மன்றத்தில் தெய்வம் ஏறி ஆடும் அவள் எயினர்கள் மன்றம் பாழ்பட்டன, பசுக்கூட்டங்கள் குறைந்து விட்டது எனவே கலைமான் மீது நிற்கும் கொற்றவைக்கு நேர்த்திக்கடனை செய்யுங்கள் என்கிறாள்.

பின்னர் சாலினிக்கு கொற்றவை போல வேடம் தரித்து வாத்தியங்கள் முழங்க கொற்றவைக்கு படையலிடுகின்றனர்.

#2 கலையூர்தி - மானும் கொற்றவையும்

தமிழரின் பாலை நிலத்து தெய்வமும் போர் மற்றும் போர்க்குடிகளின் தெய்வமுமான கொற்றவை கலைமானை ஊர்தியாகக் கொண்டவள். இதற்க்கு சிலம்பு தொடக்கம் தேவாரம், திவ்யபிரபந்தம் மற்றும் கம்பராமாயணம் வரை இலக்கிய சான்றுகளும், பல்லவர் காலந்தொட்டு சிற்பங்களும் கிடைக்கின்றன. ஆதிச்சநல்லூர் தொல்லியல் சான்றும் இதற்கு வலு சேர்க்கிறது.

இலக்கியச் சான்றும் தொல்லியல் சான்றும் ஒரே போல் பேசுவது கொற்றவையின் கலையூர்தி விடயத்தில் தான்.

தமிழகத்தின் பல கொற்றவை சிற்பங்களை நீங்கள் உற்று நோக்கினால் சிம்மத்தை தவிர அருகே கலைமானும் (Blackbuck) காட்டப்பட்டிருக்கும். இது தமிழகக் கொற்றவைக்கே உரிய சிறப்பான குறியீடு. 
அறிஞர் T.A. கோபிநாத் ராவ் அவர்களின் வரிகளை ஜேம்ஸ் c ஹார்லே இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார்.

"படிமவியல் சாத்திரங்களை உற்று நோக்குங்கால் மானும், பலியிட்டுக் கொள்ளும் வீரர்களும் துர்கை படிமவியலில் கூறப்படவில்லை" என்கிறார். அதனால் தமிழக துர்கை படிமங்கள் சற்றே மாறுபட்டிருப்பதை காணலாம்.

இது தமிழகத்திற்கே உரிய வடிவம். இந்த படிமவியலை புரிந்துகொள்ள சிலப்பதிகாரம் முதலான தமிழ் இலக்கியங்கள் துணை செய்கின்றன.

#3 கலைமானின் சிறப்பு

கொற்றவையின் புல்வாய்/கலைமான் (இரலை - Blackbuck- அன்டிலோப் செர்விகெப்ரா (Antilope cervicapra)

இந்தியத் துணைக்கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இரலை இனம் புல்வாய் (blackbuck).

தமிழகத்தின் பூர்வீக விலங்கு தமிழகத்தின் பூர்வீக தாய் தெய்வத்துடன் விளங்குவது சிறப்பு.

ஆங்கிலத்தில் deer என்றும் antilope என்றும் இருவகையான விலங்குகள் சுட்டப்படும் ஆனால் வழக்கத்தில் இவை இரண்டுமே மான் என்று ஆகிவிட்டது. Antilope என்பதற்கு இரலை என்பதே சரியான சொல். இலக்கியங்கள் கலை என்ற சொல்லையே ஆண் இரலைக்கும் பயன்படுத்துகின்றன.

கோழி எனும் சொல் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் கோழிக்கும் சேவலுக்கும் பொதுவாக சுட்டப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. (கோழிக்கோடியோன், கோழி வேந்தர்)

இவை தமிழகத்தின் கோடியக்கரை, நீலகிரி, சத்தியமங்கலம் மற்றும் வல்லநாடு பகுதிகளில் காணப்படுகின்றன. ஆண் இரலைகளுக்கு சுருண்ட நீண்ட கொம்புகள் உண்டு. கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளைநிறங்கள் கலந்ததாய் ஆண்கள் காணப்படும்.

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரியதிரி கோட்டுக் #கலைமிசைமேல் நின்றாயால்...! 

(சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள் - வேட்டுவவரி - கொற்றவை வருணனை)

#கலைஅமர்செல்வி கடன் உணின் அல்லது
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்; (வேட்டுவ வரி)

கோவலன் நாவில் கூறிய மந்திரம்
பாய் #கலைப்பாவை மந்திரம் ஆதலின்,
‘வன-சாரிணி யான்; மயக்கம் செய்தேன்; (சிலப்பதிகாரம்)

வெய்ய கலைப்பாகி* கொண்டு உவளாய் நின்றாள்*. ஐயா! அழேல் அழேல் தாலேலோ*. அரங்கத்து அணையானே தாலேலோ (பெரியாழ்வார்)

பல்லவர் காலத்தில் கொற்றவை சிற்பங்கள் இந்த கலைமானோடு வீரர்கள் வெற்றிக்கு வீர பலி கொடுப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இது முற்கால சோழர் காலம் வரை தொடர்ந்திருக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு புள்ளமங்கை கொற்றவை வீரர்களோடும் கலைமானோடும் காணப்படுதல். 

ஆனால் அதன் பின்னர் கொற்றவைக்கு சிங்கம் மட்டுமே பிரதானமான வாகனமாகிப் போனது. 

இன்றைக்கும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை தமிழகம் முழுதும் நிறைந்திருக்கிறாள். 

தோலுக்காகவும், கொம்புகளுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் வேட்டையாடப்படும் விலங்காக கலை எனும் புல்வாய் மாறிவிட்டது. இனி எஞ்சிய விலங்குகளை காக்காவிட்டால் அவைகளை சிற்பங்களில் மட்டுமே காணமுடியும்.

சங்கும் சக்கரமும் ஏந்தி திருமாலாகவும், சூலப்படை தாங்கி சிவனாகவும் காட்சியளிக்கும் துர்கை கலை மீது ஊர்ந்து சிறப்பாய் திகழ்வது தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமே.

Comments

Popular posts from this blog

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,

இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்