சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,
இத்திருக்கோயில் ஊருக்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது, முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 28-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் "முள்ளிநாட்டு பிரம்மதேயம் நிகரிலிச்சோழ சதுர்வேதி மங்கலத்து சோழேந்திரசிங்க ஈஸ்வரத்து........., என்றும் இறைவன் "கைலாயமுடைய மகாதேவர்" என்றும் குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு களில் இவ்வூர் "சேரவன்மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்றும் இறைவன் "கைலாயமுடையார்" என்றும் "கைலாசமுடைய நாயனார்" என்றும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டு செய்திகள்: • சடாவர்மன் சுந்தரபாண்டிய தேவன் - கைலாசமுடையாருக்கு நிகரிலி சோழ சதுர்வேதி மங்கல சபையார் நிலம் விற்றது. • மாறவர்மன் என்ற உடையார் பராக்கிரம சோழ பாண்டிய தேவர் இராசராச பாண்டிய நாட்டில் உத்தம சோழ வல்ல நாட்டின் பிரிவாகிய முல்லைநாடு பிரமதேயம் நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள கைலாசமுடையாருக்கு விளக்குக்குப்பணம். • சட...